AUDIOBOOKS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
AUDIOBOOKS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஜூலை, 2019

குறளின் குரல்

குறளின் குரல் !
*********
" சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு "

பொருள் -
*********
நமது மனத்தை அதன் போக்கிற்குப் போகவிடாமலும், தீய செயல்களைச் செய்யவிடாமல் தடுத்தும், நல்ல காரியங்களில் ஈடுபடச் செய்வதும் தான் அறிவு, என்கிறார், அறிவின் ஆசான் நம் திருவள்ளுவர்.

அறிவு !
அறிவதின் விரிவு !
ஐயம் திரிபுர அறியும் தெளிவு ?

எதையும் பிரிந்துணர்ந்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளச் செய்வது அறிவு !

' கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் பொய்யாகலாம். தீர விசாரிப்பதே மெய் ' என்பார்கள்.
அப்படித் தீர விசாரிக்க முக்கிய உறுதுணையாக இருப்பது அறிவு !

தீர விசாரிக்கும் முறைக்குப் பெயர்தான்
' ஐயம் திரிபுர தெளிவாகுதல் ' என்பது.
ஆம். கண்ணில் தெரிகின்ற காட்சியெல்லாம் உண்மையாகாது.

' பேய் இருக்கிறதா இல்லையா ' இன்று வரை இது நமக்கு ஐயம். ( திருமணம் ஆனவர்கள் விதிவிலக்கு..நகைச்சுவைக்காக ) யாரும் பேயைப் பார்த்திருக்க மாட்டார்கள். பேயைப் பார்த்தேன் என்று சொன்னவர்களைப் பார்த்திருப்பார்கள் !

ஐயப்படுவது என்பது அறியாமையி்ல் ஒரு வகை !

"இருட்டில் கருப்பா ஒரு உருவம் தெரிஞ்சது " என்பார்கள்.

இது பரவாயில்லை..?
' திரிபு ' நிலை என்பது சந்தேகப்படும் விஷயத்தை சத்தியம் செய்து உறுதி கொள்வது. இவ்வாறு முடிவுக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் எடுத்த முடிவு மிகவும் தவறானது என்று அவர்கள் அறிய வரும் போது மிகுந்த பாதிப்பு அடைவார்கள்.

சுமாரான இருட்டில் ஒரு பொருள் தொங்குகிறது.
அதைப் பார்த்து விட்டு..
' பாம்பா, பழுதா ' என்று நினைப்பது ஐயம்.

இல்லை இல்லை..அது பழுதுதான் என்று, தீர ஆராயாமல் பிடிவாதமாக முடிவிற்கு வந்து... அதைத் தொட்டுப் பார்க்கப் போய் பாம்பாக இருந்து விட்டால்...? பாதிக்கப்படுவோம் அல்லவா ?
இது திரிபு நிலை !

அந்த இடத்தில் வெளிச்சத்தைக் காட்டி இருட்டை விரட்டி  உண்மை நிலையை அறிந்து கொள்வது தெளிவு !

மனம் !
 எந்த நேரமும் நம்மை இம்சைப் படுத்திக் கொண்டே இருக்கும்  ரணம் !
அது நினைத்தபடியெல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கும் !
மனம் சொல்வதை எல்லாம் கேட்டுவிடாமல்...

நல்லது எது ? கெட்டது எது ? என்று ஆராய்ந்து பார்த்து, நம் அறிவைக் கொண்டு, மேற்சொன்ன 'தெளிவு' நிலையில் முடிவெடுத்து வாழ்வோமேயானால் ?

வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிரந்தரம் !

மாறாக,
அலைபாயும் மனப் பிசாசின் ஆசைக்கெல்லாம் தலையசைத்தால்...?

அவதிப்படும் வாழ்க்கையே தினம் தினம் ! 

அறிவின் வழியில் செல்வோம் !
அறியாமையை வெல்வோம் !

இனிய காலை வணக்கம், நண்பர்களே !

மதுரை G.பாலு.
22-06-2019
சனிக்கிழமை.